திங்கள், 24 ஆகஸ்ட், 2009

ரமழானில் அல் குர்ஆனோடு நமக்கு இருக்க வேண்டிய தொடர்பு



ங்கள் எல்லோரிடமும் சிறியதொரு கேள்வி.

நாம் அல் குர்ஆனின் மாதத்தில் இருக்கிறோம். இதனை வாசிக்கும் இந்த நிமிடம் வரை அல் குர்ஆனில் எத்தனை ஜுஸ்உகளை ஓதி முடித்திருக்கிறீர்கள்??

இந்தக் கேள்விக்கு உங்களிடம் திருப்தியான பதில் இருந்தால் நீங்கள் ரமழானைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அல் குர்ஆனை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம்.

திருப்தியான பதில் இல்லாவிட்டால் ரமழானைப் பயன்படுத்த இன்னும் நீங்கள் முன்வரவில்லை. அல் குர்ஆனை கண்ணியப்படுத்தவில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:

“ரமழான் மாதத்தில் தான் அல் குர்ஆன் இறக்கப்பட்டது.” (2:185)

இந்த வசனத்தை நாம் ஒவ்வொருவரும் அறபு வார்த்தையுடன் தமிழ் அர்த்தத்துடன் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், ஏனைய மாதங்களை விட இம்மாதத்தில் நமக்கும் அல் குர்ஆனுக்கும் இடையில் இருக்க வேண்டிய நெருங்கிய தொடர்பு பற்றி உணர மறந்துவிட்டோம்.

அல் குர்ஆனை ஓதுவது, மனனம் செய்வது, அர்த்தம் விளங்குவது, ஆய்வு செய்வது, நடை முறைப்படுத்துவது முதலியன முஸ்லிம்களாகிய நாம் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களாகும்.
குறைந்த பட்சம் குர்ஆனை ஓதும் விடயத்திலாவது கவனம் செலுத்துகிறோமா என்று பார்த்தால் நம்மில் பலரிடம் திருப்தியான பதில் இல்லை.

“ரமழானில் ஓர் அழைப்பாளர் வந்து கூறுகிறார்,
நன்மையில் நாட்டம் உள்ளவரே! நீர் (நன்மை செய்ய) முன்னே வா. தீமையில் நாட்டம் கொண்டவனே! (தீமை செய்வதை) நிறுத்து.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : திர்மிதி)

இம்மாதத்தில் நன்மைகள் புரிய நாம் முன் வரும் போது ஷைத்தான் தடுக்க முன் வரமாட்டான். தீமைகளைத் தவிர்ந்து கொள்ள முன் வரும் போது அவன் குறுக்கிட மாட்டான். காரணம், அவன் விலங்கிடப்பட்டிருக்கிறான். நமக்குக் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம் இந்த ரமழான்.
நன்மைகளைக் கொள்ளையடிக்க மிகச் சிறந்த, இலகுவான வழி அல் குர்ஆனை ஓதுவது என்றால் மிகையாகாது. இதனை உண்மைப்படுத்தும் வகையில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற மத்து மடங்காகும் “அலிஃப், லாம், மீம்” என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். எனினும் “அலிஃப்” என்பது ஒரு எழுத்து. “லாம்” என்பது ஒரு எழுத்து. “மீம்” என்பது ஒரு எழுத்து” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : திர்மிதி 2910)

நம் பெற்றோர் நாம் சிறு வயதில் இருக்கும் போது பள்ளிக் கூடம் அனுப்பி குர்ஆன் ஓதுவதற்கு கற்றுத் தந்தார்கள். எதற்காக? ரமழான் வந்தும் குர்ஆனை ஓதாமல் பொடுபோக்காக இருக்க வேண்டும் என்பதற்காகவா? ஓதுபவர்களாக நாம் இல்லையெனில் ஓதத் தெரிந்து என்ன பயன்?

நம்மிலுள்ள சில சகோதர சகோதரிகளுக்கு “அல் ஹம்து” சூறாவைக் கூட பார்த்து ஓதத் தெரியாமல் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கு ஓதத் தெரிந்த நண்பர்கள் இருக்கலாம். இம்மாதத்தைப் பயன்படுத்தி அவர்களை அணுகி ஓதக் கற்றுக் கொள்ள முடியும். நிச்சயம் அவர்கள் மறுக்க மாட்டார்கள். இதற்காக வெட்கப் பட வேண்டியதில்லை. அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் நமக்கென்ன வெட்கம்?

அதே போன்று, நீங்கள் ஓரளவு ஓதத் தெரிந்தவர்களாக சிரமப்பட்டு ஓதக் கூடியவர்களாக இருந்தால் “எனக்கு சரியாக ஓதத் தெரியாதே. தப்பித் தவறி பிழையாக ஓதிவிட்டால் அல்லாஹ் தண்டிப்பானோ!” என்றெண்ணி ஓதாமல் இருந்திட வேண்டாம். மாற்றமாக நீங்கள் பாக்கியசாலிகள். ஏனெனில் உங்களுக்கு இரு கூலிகள் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“குர்ஆனை நல்ல முறையில் திறமையுடன் ஓதுபவர், நல்லவர்களும் கண்ணியமிக்கவர்களுமான வானவர்களுடன் இருப்பார்கள். குர்ஆனை (இயலாமையால்) சிரமத்துடன் திக்கி திக்கி ஓதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.”

(புகாரி 4937, முஸ்லிம் 798)

அடுத்து, நேரம் இல்லையென்று யாராவது கருதினால் அது பொய்யாகும். உங்களுக்கு சோலிகள் பல இருக்கலாம். குர்ஆன் ஓதுவதையும் ஒரு சோலியாக நினையுங்கள். அல்லாஹ் உங்களுடன் பேசுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அவன் பேசச் சொல்லி உங்களைக் கேட்டால் நேரம் இல்லையென்று மறுத்து விடுவீர்களா? அல் குர்ஆன் யாருடைய வார்த்தை? முழுக்க முழுக்க நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனின் வார்த்தை.

உங்களுக்கு இலகுவான ஒரு வழி சொல்லித் தருகிறேன்.
சவூதி குர்ஆன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஓவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் இரண்டு தாள்களை (நான்கு பக்கங்கள்) ஓதி வாருங்கள். இவ்வாறு ஓதினால் ஒரு நாளைக்கு பத்து தாள்களை ஓத முடியும். பத்து தாள்கள் என்பது ஒரு ஜுஸ்உ ஆகும். இப்படி ஒவ்வொரு நாளும் ஓதி வந்தால் ரமழான் முடியும் போது முழுக் குர்ஆனையும் ஓதி முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

நம் முன்னோர்களில் மூன்று நாட்களில், ஏழு நாட்களில், பத்து நாட்களில் எல்லாம் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்தவர்கள் இருக்கிறார்கள்.
நம்மில் சிலருக்கு இது கடைசி ரமழானாகக் கூட இருக்கலாம்.

எனவே, நீங்கள் ஆர்வம் எடுத்தால் குறைந்த பட்சம் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடிக்கலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த ரமழானைப் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

ஏக நாயகன் அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக!!


3 கருத்துகள்: