வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ரமழானை வரவேற்போம்..

ம் வாழ்வில் இன்னொரு ரமழான் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ ரமழான்கள் நம்மைக் கடந்து சென்று விட்டன. இன்னும் எத்தனை ரமழான்கள் வரை நாம் உயிர் வாழப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது.

பாவங்களை விட்டொதுங்கி நன்மைகள் பல புரிந்து அல்லாஹ் விரும்பும் தக்வா உள்ள ஸாலிஹான நல்லடியார்களாக மாறுவதற்கு ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இந்த மாதத்தில் மட்டும்;; தான், சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்திருக்கிறான்.
‘‘ரமழான் மாதம் நுழைந்ததும் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.’’ (நூல் : முஸ்லிம்)

ஏனைய எந்த மாதத்திலும் இப்படியொரு சிறப்பு கிடையவே கிடையாது. இம்முறை தவற விட்டால் இன்னும் பதினொரு மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டி வரும். அதற்கிடையில் எத்தனையோ உயிர்கள் இவ்வுலகைப் பிரிய இருக்கின்றன.
எனவே, எதிர் நோக்குகின்ற ரமழானை கூடியளவு பயன்படுத்திக் கொள்ள நம் உள்ளங்களை இப்பொழுதே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமது நேரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அமல்கள் புரிய விசேடமான time table ஒன்றை தயார் படுத்திக் கொள்வது நல்லது.
ரமழானில், நோன்பு நோற்பது, நோன்பாளிகளுக்கு இப்தார் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுப்பது, தர்மம் செய்வது, கியாமுல் லைல் (தராவீஹ்) தொழுவது, குர்ஆன் ஓதுவது, பிரார்த்தனைகள் புரிவது, தவ்பா கேட்பது, இஃதிகாப் போன்ற எண்ணற்ற அமல்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கிறது.
பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் உங்களுக்கு lectures, assignments, presentations, examsஎன்று படிப்புச் சுமைகள் இருப்பது உண்மை. இதைக் காரணமாகக் காட்டி நீங்கள் நல்லமல்களில் ஈடுபடுவது சிரமம் என்று கருதி விடக் கூடாது. அல்லாஹ் அருளும் உன்னதமான இவ்வாய்ப்பை பயன்படுத்துவதில் பொடுபோக்காக இருந்து விடக் கூடாது.

முஸ்லிம்களாகிய நாம் விசேட மாதத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் நாமும் நோன்பு நோற்கிறோம் என்று இல்லாமல் ஈமானுடனும் நன்மையை எதிர்ப்பார்த்தும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘‘யார் ஈமானுடனும் நன்மையை எதிர்ப்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.’’ (நூல் : புகாரி, முஸ்லிம்)

எனவே, எமது உள்ளங்களில் தனியான ஓர் இடம் இந்த மாதத்துக்காக ஒதுக்குவோம். நல்லமல்கள் புரியக் கூடிய நல்லடியாராக தக்வா உள்ளவர்களாக நம்மை மாற்றக் கூடிய ரமழானை வரவேற்போம்.

1 கருத்து: