செவ்வாய், 15 டிசம்பர், 2009

அல்லாஹ்வுக்கு இணை வைத்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா?



அல்லாஹ்வுக்கு இணை வைத்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா?



அல்லாஹ் கூறுகிறான்:


1. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர மற்ற எதையும், தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பான். 4:48, 4:௧௧௬


2. அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை (தடுத்து) ஹரமாக்;கி விடுகிறான். 5:௭௨


3. இணைவைத்த ஆண்கள் பெண்கள் அனைவரையும் அல்லாஹ் தண்டிப்பான். 33:73, 48:௬


மேலும் பார்க்க: (40:11-12, 02:221, 06:64, 06:151, 16:54)


மேற் கூறப்பட்ட வசனங்களில் இணை வைக்கின்ற பாவத்திற்கு மன்னிப்பு இல்லை என்றும் இணை வைக்கின்றவர்களுக்கு சுவர்க்கம் ஹராம், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
எனினும், இந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு உலகில் ஒருவர் இணைவைத்து பின்பு தனது மரணத்திற்கு முன் அப்பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற நாடினால் அவருக்கும் மன்னிப்பு இல்லையென்ற முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது.


மேலே கூறப்பட்ட வசனங்கள் இணை வைத்த ஒரு மனிதன் உலகில் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறாமல் இணை வைத்த அதே நிலையிலேயே மரணித்து மறுமை விசாரணையின் போது அல்லாஹ்வின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதனையே பேசுகிறது.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக பின்வரும் வசனம் அமைந்திருக்கிறது.


4. எவர் தன் இறைவனை சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக! 18:௧௧


இந்த வசனத்தில் இணைவைக்கும் மனிதன் தான் மரணித்த பின் அல்லாஹ்வை சந்திக்க விரும்பினால் தான் இணை வைக்கின்ற கொடிய பாவத்தை விட்டு விட்டு நற்செயல்களை புரியுமாறு அல்லாஹ் உத்தரவு பிறப்பிக்கின்றான்.


இதை விட மேலாக…..


இணை வைத்த ஒருவர் உலகத்தில் வாழுகின்ற பொழுது தனது இணை வைக்கும் பாவத்தை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டால், தான் மன்னிப்பதாக அல்லாஹ் பின் வரும் வசனத்தில் எந்த வாதப் பிரதி வாதங்களுக்கும் இடமின்றி தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.


5. ''அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள். விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, யாரேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால் அவன் (அதற்குரிய) தண்டணையை அடைந்து விடுவான்.


மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவு பட்டவனாக வேதனையில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி விடுவான்.


ஆயினும் (அவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்து விட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல, அதனை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.


ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பி விடுகின்றனர்."" (25: 68,69,70,71)


மேற்படி 68ஆவது வசனத்தில் 'அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள" என்பதன் மூலம் இணைவைத்தல் ' ஆல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்" என்பதன் மூலம் கொலை ' விபசாரமும் செய்ய மாட்டார்கள்" என்பதன் மூலம் விபசாரம் ஆகிய மூன்று பாவங்களைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான்.


இப்பாவங்களில் முதலாவதாக அல்லாஹ் குறிப்பிடுவது இணைவைக்கும் கொடிய பாவத்தையாகும். எனவே, அல்லாஹ்வின் அடியார்களில் யாரேனும் இணை வைத்தால் அவனுக்கு


- தண்டணை உண்டு.

- மறுமை நாளில் வேதனை இரட்டிப்பாக்கப்படும்.

- மன்னிப்பு இன்றி இழிவுபட்டவனாக வேதனையில் நிரந்தரமாக இருப்பான்.


என்று மேற்படி 68, 69ஆவது வசனங்கள் குறிப்பிடுகிறது. இதே செய்திகளைத் தான் ஏற்கனவே நாம் பார்த்த இணை வைத்தலைப் பற்றி பேசுகின்ற 4:48, 5:72, 33:73 ஆகிய வசனங்கள் சுமந்து நிற்கின்றது.


எனினும் நாம் தற்போது பார்த்து வருகின்ற (25: 68,69,70,71) ஆகிய வசனங்களில் இன்னும் மேலதிகமான தகவல்கள் இருக்கின்றன.


அது தான்…


யாராவது குறிப்பிடப்பட்ட மூன்று பாவங்களில் ஒன்றாகிய இணை வைக்கும் பாவத்தைப் புரிந்து பின்னர் கைசேதப்பட்டு, அப்பாவத்திலிருந்து விலகி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு , நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்கிறாரோ அவரது இணை வைத்த இந்தப் பாவம் மன்னிக்கப்பட்டு நன்மையாக மாற்றப்படுகின்றது என்பதனை 70 ஆவது வசனம் சுட்டிக் காட்டுகின்றது.


அத்துடன் அதற்கடுத்த வசனத்தில் இப்படியான பாவத்தில் சிக்கியிருப்பவர்களை உடனடியாக பாவமன்னிப்பு கேட்பதற்கும் அல்லாஹ் உற்சாகப்படுத்துகிறான்.


எனவே, மிகவும் தெளிவான விடயம் அல்லாஹ்விற்கு இணை வைத்த பாவத்திற்கு, மரணத்திற்கு முன் மன்னிப்பு உண்டு என்பதனை இச்சிறு ஆய்வின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

மௌலவி நஸ்ரி ஜிப்ரி (ஸலபி)